Sunday, 13 March 2016

பெண்கள் சமாதானம் : பகிர்ந்து மகிழுங்கள்

பெண்கள்  சமாதானம்

      இப்பொழுது பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று பத்திரிக்கைகளிலும் , சட்டசபைகளிலும் கூறுகிறார்களே அதைப் பற்றி பார்ப்போம்.

      பூர்வீக ராஜாக்கள், ரிஷிகள், சித்தர்கள் முதலான முதியோர்கள் தங்களுடைய பத்தினிகளை எவ்வளவோ கெளரவமாக நடத்தினார்கள். அவர்களுடைய வார்த்தைகளை ஒருநாளும் தட்டியதில்லை. இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச புராணங்களில் தங்களது ஸ்திரிகளை கீழேவிட மனம் இல்லாதவர்களாய் சொல்லப்பட்டு இருப்பதை நாம் கண்முன்னே அறிகிறோம். அது எவ்வாறு எனில்,

     பரமசிவன் தனது தேவியாகிய பார்வதியை பாகத்திலும், கங்கை என்னும் மற்றொரு பெண்ணை தலையிலும் வைத்துக் கொண்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. மகாவிஷ்ணுவானவர் தனது பாரியாகிய லட்சமியை தனது மார்பிலும் , நான்முகன் ஆகிய பிரம்மதேவன்  தனது பத்தினியை நாவிலும் வைத்து உள்ளார். இவ்வாறாக பற்பல புராணங்களையும் , இதிகாசங்களையும் படித்துள்ள நாம் நமது மனைவியை அடிமையிலும் அடிமையாக வைத்து உள்ளோம். முன்னோர்கள், மனைவி என்பவள் படுக்கையில் மட்டும் தான் மனைவி, மற்ற நேரங்களில் தாயாக பூஜிக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அதனால்தான் தனது துணைவியார்களை அனைத்த மாதிரி காட்சி கொடுக்கின்றார்கள் மும்மூர்த்திகள். இதை உணராத நாம் மனைவியை அடிமையாக நடத்துகின்றோம். அர்த்தனாரீஸ்வரராக இறைவன் நமக்கு காட்சி கொடுக்கின்றார். எதற்காகவெனில், வலதுபுறம் சிவனும், இடது புறம் சக்தியுமாக காட்சி அளிக்கிறார்கள். அதனால்தான்  நமது உடம்பில் வலது கை மோதிரவிரலில் மோதிரம் போட்டால் மோதிரம் சேர்வதற்கு கடினமாக இருக்கும். அதே மோதிரத்தை இடது கை மோதிர விரலில் போட்டால் எளிதாக போய்விடும். அதே போல் பெண்ணின் மார்பு வலது புறம் பெரியதாகவும் இடது புறம் சிறியதாகவும் இருக்கும். இதற்கு என்ன அர்த்தம் என்றால் இடது புறம் சரிபாதி பெண் உடம்பு. வவது புறம் சரிபாதி ஆண் உடம்பு. இது யாருக்கும் தெரியாத உண்மை ரகசியம். இதைத்தான் அர்த்தனாரீஸ்வரர் நமக்கு காட்டுகின்றார். நமது உடம்பில் இருவரும் இருப்பதால், யாரையாவது ஏன்டா சிவனேனு உட்கார்ந்து இருக்கின்றாய் என்று கேட்டால் சிவனை குறிக்கும். அதற்கு அவன் சக்தி இருந்தால்தானே வேலை செய்ய முடியும் என்று கூறுவான். அது சக்தியை குறிக்கும். ஆகையால்தான் அனைத்து சக்தியையும் கொடுப்பது பெண்ணே. நாம் கண்களில் அறுவை சிகிக்சை செய்தால் கூட முதலில் சிவனின் பகுதியாகிய வலது புறம் தான் அறுவை சிகிச்கை செய்வோம். இடதுபுறம் செய்ய மாட்டோம். ஏன் என்றால் அது சக்திக்கு உரிய பகுதி. எனவே இடது கண் சக்தி வாய்ந்தது. நீங்களும் யாரை வேண்டுமானாலும் பார்த்தல் முதலில் வலதுபுறம் தான் அறுவை சிகிச்சை செய்திருப்பார்கள். இதை நீங்களே நேரடியாக கண்டு உணரலாம். இது மட்டும் அல்ல கைரேகை பார்த்தால்கூட, பெண்ணிற்கு இடதுகையையும்,ஆணிற்கு வலது கையையும் பார்ப்பார்கள். மருத்துவர்கள் நாடி பார்த்தால்கூட பெண்ணிற்கு இடது கையிலும், ஆணிற்கு வலது கையையும் பார்ப்பார்கள். இது மற்றுமின்றி பாம்புகளில் கூட பெண் பாம்பு கடித்தால் நம் கண்ணில் உள்ள கருப்பு விழி கீழ்நோக்கியும், ஆண் பாம்பு கடித்தால் கருப்புவிழி மேல் நோக்கியும் இருக்கும்.  இறைவன் எவ்வளவு சூட்சுமத்தை வைத்துள்ளான் பார்த்தீர்களா!  இதையெல்லாம்  அறிந்தே சிவபெருமான் அனைத்து சக்திகளையும் சக்தியாகிய பார்வதிக்கே கொடுத்து விட்டார்.
ஆகையால்தான் பூமாதேவி, கங்காதேவி, கோதாவரி, யமுனை, நர்மதா, சிந்து, வைகை, தாமிரபரணி, இப்படி இந்தியாவில் ஓடும் அனைத்து நதிகளுக்கும் பெண்ணின் பெயர்களையே வைத்துள்ளார்கள். இந்தியாவைக் கூட பாரதத்தாய் என்றுதான் கூறுகின்றார்கள். பெண் பார்க்கச் சென்றால்கூட மகாலட்சுமி போல் இருக்கிறாள் என்று சொல்கிறார்களே தவிர, மகாலட்சுமணன் போல் இருக்கிறான் என்று ஆண்களை யாரும் கூறுவது இல்லை. இப்படி அனைத்திற்கும்  முக்கியத்துவம் கொடுக்கும் பெண்களை ஏன் அடிமையாக நடத்துகிறீர்கள்?

      பெண்கள் அனைத்தையுமே சுமக்கக் கூடியவள். ஆகையால்தான் தனது உடம்பிலே பாருங்கள் இடது கால் பெண்ணுக்குச் சொந்தம். வலது கால் ஆணுக்குச் சொந்தம்.

      எனவேதான் , இடது கால் மீது வலது கால் அமர்ந்து உள்ளது. நாம் கைகட்டும் போது கைமீது வலது கை அமர்ந்து உள்ளது. இது மக்கள் அனைவரும் அறியாத ஒன்று. அவர்களை  அறியாமலே அவர்கள் இதை செய்வார்கள்.

      மேலும் பெண்கள்  மூக்குத்தி அணிந்தால்கூட இடது மூக்கில்தான் அணிய வேண்டும். வலது மூக்கில் அணியக்கூடாது மீனாட்சி அம்மனை பார்த்தால் அம்மன் இடது மூக்கில்தான் மூக்குத்தி அணிந்து இருக்கும். அதே போல் திருமணம் செய்யும் பொழுதுகூட தாலி கட்டும் பொழுது பெண்னை இடதுபுறம் வைத்துத்தான் தாலி கட்ட வேண்டும். வலதுபுறம் வைத்து தாலி கட்டக்கூடாது. மேலும் நாம் நித்திரை செய்யும் போது கூட இடது கை கீழே வைத்து வலது உடம்பு மேல் பகுதியாக ஒரு புறம் சாய்ந்து படுப்போம். ஏன் என்றால் பெண் உடம்பு ஆண் உடம்பை சுமக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். அது மட்டுமல்ல குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தாய்பாலை பீச்சி ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு சொட்டு பாலை விட்டால் பால் மிதந்தால் ஆண் குழந்தை. பால் முங்கிவிட்டால் பெண் குழந்தை என்று அறிக. இதில் கூட பெண்கள் சுமக்கக்  கூடியவளாகத்தான் இருக்கிறாள். அது மட்டும் அல்ல. தேங்காயில் கூட பெண் முறியில் தான் குடுமி இருக்கும். ஆண் முறியில் குடுமி இருக்காது.

     அதேபோல் மரத்தில் கூட அரசமரம் ஆணாகவும், வேம்பு மரம் பெண்ணாகவும் இரண்டும் இணைந்தே வளரும். ஆனால் ஆண்மரமான அரசமரம் ஒங்கி உயர்ந்து வளரும்.  ஆனால் பெண் மரமான வேப்பமரம் நீங்கள் வளருங்கள் என்று விட்டுக் கொடுத்து தாழ்வாக நிற்கும். அப்படி மரத்தில்கூட பெண்மரம் விட்டுக் கொடுக்கின்றது.

      இது மட்டுமின்றி உலகத்திலேயே மறுபிறவி யாருக்கு என்றால் அது பெண்ணுக்குத்தான் போய் சேரும். அது எவ்வாறென்றால் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கும் பொழுது அவள்படும் வலியும் , வேதனையும் கணக்கில் அடங்காதது. நான் பத்து மடங்கு சொன்னேன் என்றால் அதை நூறு மடங்காக நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். ஒரு பெண், குழந்தையை பெற்றெடுக்கும் பொழுது அவள் வேதனைப்படும் பொழுது அதைப் பார்த்து அழுவது அவளை பெற்றெடுத்த தாய்தான். நம் தாய் நமக்காக அழுகிறாளே என்று எண்ணி தன்தாயை கூப்பிடமாட்டாள், பாசமாக வளர்த்த தந்தையை கூப்பிடமாட்டாள், ஒரே கர்ப்பப்பையில் வளர்ந்த தன் உடன்பிறந்தவர்களையும் கூப்பிடாமல், சில மாதத்திற்கு முன்பு வந்த தன் கணவனைத்தான் அத்தான்  இங்கே வாருங்கள், என்னால் வேதனை தாங்க முடியவில்லையே. என் பக்கத்தில் வந்து நில்லுங்கள் என்று அழுது புலம்புகிறாள். இந்த வேதனையில் கூட தன் கணவனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றாள். நம்மை பத்து மாதம் உதிரத்தில் சுமந்து பெற்று எடுத்து பாலூட்டி தாலாட்டி சீராட்டி வளர்த்த தாய்மார்களும் பெண்கள் தானே. இரவு எல்லாம் கண் விழித்து அடிக்கடி பால் கொடுத்து, மருந்து கொடுத்து தாங்கள் பத்தியம் இருந்து பிள்ளைகளின் மலஜலங்களை சகித்துக்  கொண்டு, வாயை கட்டி, உயிற்றைக் கட்டி பிள்ளைகள் வளரும் பொருட்டு தாய்மார்கள் படும் கஷ்டம் எவ்வளவு என சொல்லக்கூடுமா. பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறாள். பிறந்த பின்பும் இறக்கிவிடாமல் சுமந்து கொண்டே இருக்கிறாள். தன் தாய்  தந்தையுடன் இருக்கும்  பொழுது பொட்டு வைத்து பூ வைத்து வளையல் அணிந்து வண்ண வண்ண ஆடைகள் அணிந்து வளர்கின்றாள். தம் அண்ணன் தம்பி தமக்கை உற்றார் உறவினர்கள் கையாண்ட சொத்தும், சுதந்திரமும் மறந்து தன் கணவனே கதி என வருகிறாள். 20 வயது வரை தம் தந்தையின் பெயரில் முதல் எழுத்தை தன் பெயரின் முன் போடுகிறாள். திருமணமான பிறகு தன் கணவனின் முதல் எழுத்துக்கு மாறிக் கொள்கிறாள். அது மடடும் அல்ல அவன் இறந்த பின்பு தலைக்கு வைக்கும் பூ வையும், பொட்டையும் இழக்கிறாள். இடையில் வந்த தாலியையும் இழக்கிறாள். இப்படி கணவனுக்காக தன்னையே மாற்றிக் கொள்கிறாள். அப்படியிருக்க தன் மனைவிக்காக அவன் என்ன மாற்றம் செய்கிறான். அப்படிப்பட்ட பெண்ணிற்கு எந்த மனக் குறையும் கவலையும் அணுகவிடாமல்  காப்பாற்ற வேண்டியது நமக்கு மிகவும் கட்டாயமான கடமை அல்லவா?

     ஆனால் பெண்கள் இப்பொழுது ஆணுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் வளர ஆரம்பித்து விட்டார்கள். அன்னை தெரசா, இந்திராகாந்தி அம்மையார் போன்ற சாதனை படைத்த பெண்களை பட்டியலிட்டுக்  கொண்டே போகலாம்.  உதாரணமாக விண்ணில் சென்று சாதனை புரிந்த கல்பனா சாவ்லாவும் ஒரு பெண் அல்லவா?.

இதைத்தான் மகாகவி பாரதியார்,

    " பெண்கள் நாட்டின் கண்கள்!
      பெண்கள் உலகின் தெய்வம்!!"
            - என்று கூறினார்.

பெண்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து அவருடைய மனம் எவ்வளவு பாதிப்பு அடைந்திருந்தால் அவர் இப்படி ஒரு கவியை பாடி இருப்பார். அப்பேர்ப்பட்ட கவியை படித்தும் நாம் பெண்களின் அருமையை உணரவில்லை.

  " மண்ணின்றி காற்றின்றி விண்ணின்றி
         விளக்கின்றி வளப்பமோடு
    தண்ணின்றி நீரின்றித் தரையில் மரம்
           மாமனிதர் தங்கவில்லை
     கண்ணின்றிக் காட்சி இல்லை பலனின்றி
           மனமில்லை கருதவில்லை
      பெண்ணின்றி பிறப்பில்லை பிறப்பின்றி
          உயிர் இல்லை பெருக்கமின்றே!"

இந்த வார்த்தைகளை படித்த பின்னாவது பெண்களை கண்ணீர் சிந்த விடமாட்டீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன்.

     இத்தனையும் படித்த பின்னும் பெண்ணை மதிக்கவில்லை எனில் இந்த மண்ணில் உணக்காக வாழ்வதில் யாருக்கும் இன்பம் இல்லை.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home